search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம நிர்வாக அதிகாரிகள்"

    பெரம்பலூர், அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் 107 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த 10-ந் தேதி முதல் பணியை புறக்கணித்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திட ஏற்கனவே முடிவு செய்தனர். இந்நிலையில் திடீரென்று அந்த முடிவை கைவிட்ட சங்கத்தினர் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் திரண்டனர்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜா தலைமையில், அச்சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அனுமதி இன்றி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக 16 பெண்கள் உள்பட 79 கிராம நிர்வாக அதிகாரிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமையில், அச்சங்கத்தினர் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்து, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 
    பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஊர்வலம் சென்று மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் மனுவை அளித்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அதிகாரிகள் அனைவருக்கும், ஒரே அரசாணை மூலம் மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். தங்களது அலுவலகங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கணினி வழிச்சான்றிதழ்கள், இணையதள பணிகளுக்கான செலவின தொகை மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும். அடங்கல் சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரி டிஜிட்டல் கையொப்பமிட்டு வழங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த மாதம் ( நவம்பர்) 28-ந் தேதி முதல் ஆன்லைன் சான்றிதழ் பதிவு செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா, காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நேற்று கோரிக்கை விளக்க ஊர்வலம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் புறநகர் பஸ் நிலையம், பாலக்கரை வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மனுவை மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் அளித்தனர்.
    மன்னார்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சுந்தரக்கோட்டை:

    பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அலுவலகங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் சான்றிதழ்களை வழங்க வசதியாக கணினி வழங்க வேண்டும். இணையதள பணிகளுக்கு ஆகும் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பணிபுரியும் கிராமத்தில் தங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சற்குணம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ராஜ்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் 164 பேர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    கிராம நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Vaiko

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 28-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் டிசம்பர் 10-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்திலும் இறங்கி உள்ளனர்.

    கிராம நிர்வாக அலுவலர்களாக 50 விழுக்காடு பெண்கள் பணிபுரிவதால், அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் கோரி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகங்களில் மின்வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் நிறைவேற்ற முடியாதது அல்ல.

    தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை கூடுதலாக கவனிக்க வேண்டி இருப்பதால், கிராம நிர்வாக அலுவலர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப் படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.

    எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற முன் வரவேண்டும். பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளர். #Vaiko

    பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்
    பெரம்பலூர்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 28-ந் தேதி முதல் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை இணையதள வாயிலாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை புறக்கணித்தும், கடந்த 5-ந் தேதி தாலுகா அலுவலகங்களில் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளர் கார்த்திகேயன் தலைமையில் பெரம்பலூர் தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று பணியை புறக்கணித்து தாலுகா அலுவலக வளாகத்தில் சாமியானா பந்தல் போட்டு, அதன் கீழ் அமர்ந்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 
    ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருவதால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான கல்வித்தகுதியை உயர்த்துவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவது, ஆன்லைன் பணிகளுக்கு ஊதியம் வழங்குவது, மாவட்டத்திற்குள் மட்டும் பணி மாறுதல் கொடுக்க வேண்டும் உள்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ந்தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருவதால் ஆன்லைன் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம், இருப்பிடம், சாதி, விதவை உள்ளிட்ட 22 வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் ஸ்தம்பித்துவிட்டது.

    இந்த போராட்டத்தால் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி. கமுதி, திருவாடானை உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    பட்டா மாறுதல் பணிகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    போராட்டம் குறித்து வி.ஏ.ஓ. சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜெகராயன் கூறியதாவது:-

    எங்கள் நியாயமான 21 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். நேற்று பரமக்குடியில் எங்களின் வேலை நிறுத்தம் குறித்து மக்களை தேடி பிரசாரம் நடந்தது. இன்று பார்த்திபனூரில் மக்களை தேடி பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். என்றார். #tamilnews
    ×